புதுச்சேரியில் கடற்கரையில் பாறைக்குள் சிக்கிய இளம்பெண்ணை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுரை முல்லை நகரைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
விடுமுறையை கழிக்க சகோதரி மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரி வந்த அவர், கடற்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கடலை ரசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரெனக் கால் தவறி விழுந்த அவர், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டார். வைஷ்ணவியால் வெளியில் வர முடியாத நிலையில், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் பாறைகளை அகற்றி, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வைஷ்ணவியை மீட்டனர்.
கால் முறிவும், லேசான காயமும் அடைந்திருந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
















