ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என வனத்துறை அறிவித்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஆழியாறு நீர்நிலைகளில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கணக்கெடுப்பு பணியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வனத்துறை சார்பில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும், பறவைகளை அடையாளம் காணும் அறிவுரை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தவறான தரவுகள் எதிர்கால வன உயிரின பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆனைமலை வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் பறவைகளின் பெயர்களை தவறுதலாக உச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
















