கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வட்டாட்சியரை மிரட்டும் வகையில் காரை மறித்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாதம்பட்டி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதன்பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது அவர்களது காரை மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், ஜேசிபி வாகனத்தால் மறித்து அச்சுறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போச்சம்பள்ளி போலீசார், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
















