மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்றிரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்துத் தீபாராதனை நடத்தி வைக்க உள்ளார். சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 14 ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
















