அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.
இதற்காக 20 அம்சங்கள் அடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ளார். அதனை உக்ரைன் ஏற்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும் அதில் உள்ள சில அம்சங்களை ஏற்க உக்ரைன் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ஜெலென்ஸ்கி, அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா – ஐரோப்பா – உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தும் ஏறக்குறைய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும், உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
















