அண்மை காலமாக புவியின் சுழற்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
“இன்றைய பரபரப்பான உலகில் நாள்தோறும் நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம் உள்ளன. இதனால், ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதே போதவில்லை. ஒருநாளைக்கு குறைந்தது ஒருமணிநேரமாவது அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும்” என நம்மில் பலர் நினைத்திருக்கலாம்.
அத்தகையவர்களுக்காக ஒரு நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் ஒருநாள் என்பது நீண்டதாக இருக்கும் எனவும், ஒருநாளின் 24 மணிநேரம் என்பது 25 மணிநேரமாக மாறும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கான காரணத்தை பார்ப்பதற்கு முன்னால், பூமியின் ஒருநாள் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை முதலில் பார்க்கலாம். பொதுவாக பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் 24 மணிநேரம் எனவும், அதுவே ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது எனவும் பலர் நினைக்கின்றனர்.
ஆனால், நமது புரிதலுக்காக கூறப்பட்ட ஒரு எளிய விளக்கம்தான் இது.
உண்மையில் ஒருநாள் என்பது பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு அளவிடப்படுகிறது. வான்வெளியில் உள்ள விண்மீன் கிரகம் 360 டிகிரி சுழன்ற பின், மீண்டும் அதே நிலையை வந்தடைய சுமார் 23 மணிநேரம் 56 நிமிடங்கள், 4 வினாடிகள் ஆகிறது. இதனை, ஒரு நட்சத்திர நாள் என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டும் ஒருநாளை கணக்கிடலாம்.
அதேபோல், சூரியனை அடிப்படையாக கொண்டும் ஒரு நாள் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு நாளின் மதியத்தில் இருந்து அடுத்த நாளின் மதியம் வரையிலான கால அளவு, ஒரு சூரிய நாள் எனப்படுகிறது. இது, வருடம் முழுவதும் ஒரே மாதிரி இருக்காது.
உதாரணமாக, ஜூலை மாதத்தில் இது 23 மணிநேரம் 59 நிமிடங்களாகவும், டிசம்பர் மாதத்தில் 24 மணிநேரம் 30 வினாடிகளாகவும் இருக்கும். இவ்வாறு மாறியபடியே உள்ள சூரிய நாளின் சராசரி 24 மணிநேரம். இதனை அடிப்படையாக கொண்டும் நாம் ஒருநாளை கணக்கிடலாம்.
இந்த ஒருநாள் என்பதுதான், எதிர்காலத்தில் 25 மணிநேரமாக மாறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் சுழற்சியை லேசர் கதிர்வீச்சுகள், ரேடியோ சிக்னல்கள் உள்ளிட்டவற்றை கொண்டு ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
சந்திரனின் ஈர்ப்பு விசை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நிலவின் ஈர்ப்பு விசையால்தான் கடல்களில் அலைகள் உருவாகின்றன என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த அலைகள் ஒருவித உராய்வை ஏற்படுத்தி பூமியின் சுழற்சி வேகத்தை குறைத்து வருவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
அத்துடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன. இது குறித்து 120 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு நாசா ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த 100 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகுவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது, கடல் மட்டம் உயர்வது போன்ற அசாதாரண மாற்றங்களின் வேகம் அதிகரித்தது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து spin axis எனப்படும் புவியின் சுழல் அச்சில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து ஒரு நாளின் நீளம் 24 மணிநேரத்தில் இருந்து 25 மணிநேரமாக மாறக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் சரி… ஒரு நாளைக்கு 25 மணிநேரம் என்ற இந்த மாற்றம் எப்போது ஏற்படும் என்ற கேள்வி எழலாம். 2026ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதலே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 200 மில்லியன் ஆண்டுகள், அதாவது 200 கோடி ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதுவரை, ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான் இருக்கும். இந்த கால அளவுக்குள்தான் நாம் நமது அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். வேறு வழியே இல்லை.
















