பொதுமக்கள் அமைதியாகப் புத்தாண்டை கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 19 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு உதவியாக, ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதன்கிழமை இரவு 9 மணியிலிருந்து 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் சோதனையில் ஈடுபட உள்ளனர். 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று மக்களுக்குப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்கள் கடலில் இறங்கவும், குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அனுமதி பெற்றே நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்றும், இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















