கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடிப்படையாகக் கொண்டு, சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள Battle Of Galwan திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரம் அத்திரைப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகச் சீனா குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள Battle Of Galwan படத்தின் டீசர் இது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே எல்லை தகராறு தொடர்பாக எந்த மோதலும் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இரு நாட்டு வீரர்கள் இடையே திடீரென மோதல் வெடித்தது. அந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர்தான், 16 Bihar Regiment-ன் கமாண்டிங் அதிகாரியான கர்னல் பிகுமல்ல சந்தோஷ் பாபு(Bikkumalla Santosh Babu). கல்வான் மோதலில் அவர் எத்தகைய தியாகத்தை வெளிப்படுத்தினார் என்பதை விளக்கும் வகையில்தான் Battle Of Galwan திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அபூர்வா லகியா இயக்கியுள்ளார்.
பிகுமல்ல சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் கானின் பிறந்தநாளான டிசம்பர் 27ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, சீனப்படை வீரர்களை எதிர்கொள்ளச் சல்மான் கான் கட்டையைக் கையிலேந்தியபடி தயாராக நிற்கும் காட்சி அனைவரையும் ஈர்த்துள்ளது.
குறிப்பிட்ட இந்தக் காட்சி, Game of Thrones தொடரை நினைவூட்டும் வகையில் உள்ளது. அத்தொடரில் வரும் Jon Snow, எதிரி படையை எதிர்கொள்ள வாளேந்தியபடி ஒற்றை ஆளாகத் தனித்து நிற்பார். மிகவும் goosebumps-ஆன காட்சி அது. அதன் பாதிப்பில்தான் Battle Of Galwan டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வான் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசரை, ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் சீனா புலம்பித் தள்ளி வருகிறது. Battle Of Galwan குறித்து கட்டுரை வெளியிட்டுள்ள சீனாவின் முக்கிய நாளிதழான The Global Times, கல்வான் மோதல் சம்பவத்திற்கு இந்தியாதான் முழு பொறுப்பு எனக் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய படைகள் திட்டமிட்டு எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து பிரச்னையை உருவாக்கியதாகவும் விமர்சித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் செயல் எல்லைப் பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ள The Global Times, சீன வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் கூறியுள்ளது. மேலும் இந்தியா தரப்பில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டு ஒன்று எனவும், இவ்விவகாரத்தில் உண்மைகள் திரித்து வெளியிடப்பட்டதாகவும் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது. “இந்திய படைதான் முதலில் எல்லையை கடந்தன.
எனவே சீன ராணுவத்தினர் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தனர். நிலைமை இப்படி இருக்க, Battle of Galwan திரைப்படம் பகை உணர்வைத் தூண்டும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பதற்றத்தை அதிகரிப்பதற்கான முயற்சி.” எனவும் சீனாவின் The Global Times நாளிதழ் கூறியுள்ளது.
துரந்தர் படத்தை பார்த்துத் தற்போதுதான் பாகிஸ்தான் புலம்பி முடித்தது. அதற்குள் சீன நாளிதழ் தன் பங்கிற்கு Battle Of Galwan திரைப்படம் குறித்து புலம்ப ஆரம்பித்துவிட்டது. அதுவும், வெறும் டீசரை பார்த்து. அடுத்தாண்டு முழு திரைப்படமும் வெளியாகும்போது, சீன அதிபரே புலம்பத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
















