இந்தாண்டு அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தாண்டு மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை பிற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஏற்றுமதியை விட 2 மடங்கு அதிகமாகும். இதன் மூலம், அரிசி ஏற்றுமதியில் தன்னிகர் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இருப்பினும், இந்தச் செய்தி பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த நெல் விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.
காரணம், தண்ணீர் பற்றாக்குறையாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் அவர்கள் மிகுந்த பதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நெல் சாகுபடி என்பது மிகவும் செலவேறிய ஒன்றாக மாறி வருகிறது.
பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் முன்பெல்லாம் 30 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்ததாகவும், தற்போது 50 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைப்பதாகவும் நெல் விவசாயிகள் கூறுகின்றனர்.
இதனால், ஆழ்துளை கிணறு அமைக்க கூடுதலாகப் பெரும் தொகையை செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் இந்த பிரச்னையை போக்க, குறைந்தளவு நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
ஆனால், பெரும்பாலான விவசாயிகள் நெல்லுக்கு கிடைக்கும் மானியத்தை கருத்தில்கொண்டு, பிற விவசாயங்களுக்கு செல்ல மறுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, பஞ்சாப்பில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய தோராயமாக 39,000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், தினை போன்ற சிறு தானியங்களை விளைவித்தால் அதற்கும் குறைவான தொகைதான் செலவாகும்.
குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை சேமிக்கவும் முடியும் என அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.
மறுபுறம், தண்ணீர் இல்லை எனக்கூறி ஆழ்துளை கிணறுகளை அதிகளவில் அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் பாதிக்கிறது.
எனவே, இதனை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை விதிக்கப்பட்டு வருகிறது.
















