உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண ஒளிகளால் ஜொலித்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அதேபோல அங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிங்கப்பூரில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர். அப்போது இடைவிடாது வெடித்த வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக்கின.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக, சிட்னி பாலத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஈஃபில் டவரில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி திருவிழா போல காட்சியளித்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை இரவை பகலாக்கியது.
















