தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை வரவேற்றனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடியும், பாடல்கள் பாடியும் மகிழ்ந்தனர்.
மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அந்த குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார் மைதானத்தில் திரளான மக்கள் கூடி புத்தாண்டை வரவேற்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாகமாக ஆடி பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மிக பாடல்கள் பாடப்பட்டன. பல வண்ண ஒளிகளை கொண்டு ஆதி யோகி சிலை ஒளிர செய்யப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதேபோல், புதுச்சேரி கடற்கரை பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.
















