சிகரெட்டின் விலையை உயர்த்தும் புதிய கலால் வரி சட்டத்திருத்தம், பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலால் வரி திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாட்டில் தற்போது சிகரெட்டின் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாக கொண்டு ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 200 முதல் 735 ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனை மாற்றி, இரண்டாயிரத்து ஐம்பது முதல் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை வரியை உயர்த்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிகரெட்டின் விலை, இனி 72 ரூபாய்க்கு உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி, மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாகவும், ஹுக்கா புகையிலைக்கான வரி 40 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால், இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் புழக்கத்தை குறைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
















