வெள்ளியை ஏற்றுமதி செய்வதற்கு சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் உலக விநியோக தொடர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளியை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த அக்டோபர் மாதம் சீன வர்த்தகத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இதனால், வெள்ளியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும், வெள்ளி ஏற்றுமதிக்கு ஒட்டுமொத்த தடை அறிவிக்கப்படாவிட்டாலும், 44 நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்றுமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாடு, அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ராணுவ தளவாட வினியோக தொடரில் பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரிக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
எனினும், மின்னணு பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் முக்கிய பங்கு வகிக்கும் வெள்ளி இறக்குமதி மீது சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களை கவலையடைய செய்துள்ளது.
















