ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற ஏற்காடு விரைவு ரயில் சேவையை திமுக எம்பி பிரகாஷ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் ஆகியோர் பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்ததற்கு பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு விரைவு ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனடிப்படையில், ஈரோட்டில் இருந்து 9 மணிக்கு புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயிலின் நேரத்தை 9.45 மணிக்கு மாற்றி மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், இரவு ஈரோடு ரயில் நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயிலுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ரயில் நேரத்தை மாற்றி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் முழக்கமிட்டனர். இதற்கு போட்டியாக, திமுகவின் முயற்சியால் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதாக கூறி திமுகவினர் கோஷமிட்டனர்.
மேலும், திமுக எம்எல்ஏ சந்திரகுமார் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டியும், எம்பி பிரகாஷ் பச்சை டார்ச் லைட் அடித்தும் ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதற்கு, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















