கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் ஐந்து பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அமைதியாக போராடும் ஈரான் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டால், பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட காலமாகவே ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் 42.5 சதவீத பணவீக்கத்தால் ஈரான் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களாலும், அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலாலும் ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது.
கடந்த டிசம்பர் 28ம் தேதி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் நாணயமான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக பெரும் வீழ்ச்சி அடைந்தது. இதனால், நாட்டின் சில்லறை வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் மசூத் பெஷேஷ்கியன், போராட்டத்தில் ஈடுபட்ட வணிகத் தலைவர்களைச் சந்தித்து பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டங்களை முன்வைத்த நிலையிலும், வணிகர்கள்,மாணவர்கள் உட்பட பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், “சர்வாதிகாரிக்கு மரணம்” என்றும், 1979 இஸ்லாமியப் புரட்சியின் போது பதவியிலிருந்து அகற்றப்பட்ட மறைந்த ஷா முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவிக்கு ஆதரவாகவும் ஷா வாழ்க என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
தொடர்ந்து 5வது நாளாக நடந்துவரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 6 போராட்டக் காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகருக்குத் தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லோரெஸ்தான் மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் மூன்று பேர் கொல்லப் பட்டுள்ளனர். சுமார் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னதாக தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 470 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சஹர்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் இரண்டு பேர் கொல்லப் பட்டுள்ளனர். இது தவிர லோர்டேகன், குஹ்தாஷ்ட் இஸ்ஃபஹான் மற்றும் ஃபார்ஸ் மாகாணங்களிலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. தெருவில் உள்ள கடைகளில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிவதையும், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுடுவதும், இது வெட்கமற்றது என்று மக்கள் கூச்சலிடுவதையும் அந்த வீடியோக்கள் காட்டுகின்றன
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு விசுவாசமான இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய பசிஜ் என்ற ஒரு தன்னார்வ துணை ராணுவப் படையினரே போராட்டக் காரர்களைக் கொன்றுள்ளனர். மேலும், அமெரிக்காவுக்கும் ஷாவுக்கும் ஆதரவாக செயல்பட்ட ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 100 கடத்தல் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க அமெரிக்கா தயாராகவே உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி, ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் மத்திய கிழக்கு முழுவதும் குழப்பத்துக்கும் அமைதி இன்மைக்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து ஈரானில் நடந்துவரும் மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கலாம் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















