சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டுத் தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 47க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 115க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பயங்கர தீ விபத்துக்கு காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அழகு கொஞ்சும் நாடான சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸில் கிரான்ஸ்-மொன்டானா என்னும் உலகப் புகழ்பெற்ற பிரபலமான சுற்றுலா தலம் உள்ளது. பனிச்சறுக்கு மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளுக்காக இச்சுற்றுலா தலத்துக்கு உலகமெங்கும் இருந்து மக்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்னிக்கு அருகில் அமைந்துள்ளது.
2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் நள்ளிரவுக் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றுவந்தன.
கிரான்ஸ் -மொன்டானாவில் உள்ள இந்த ரிசார்ட்டும் ஏராளமான சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. ரிசார்ட்டில் 300 பேரும், அதன் மேல்தளத்தில் 40 பேரும் ஆடல், பாடல் என புத்தாண்டுத் தினத்தை நள்ளிரவை தாண்டியும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத வகையில் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
16 இத்தாலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.
இந்த தீவிபத்து வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. தீவிபத்து ஏற்பட்ட பகுதிக்கும் தரைத்தளத்துக்கும் இடையே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
இசையும் ஷாம்பெயினும் என புத்தாண்டு மதுவிருந்து முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த நிலையில், BAR-ல் இருந்து பிரகாசமான ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் வெளியேறியதாக, நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார். இருட்டில் மக்கள் கத்திக் கொண்டு ஓடுவதையும் அவர் வீடியோ எடுத்துள்ளார்.
பெரும் தீயிலிருந்து தப்பிக்க ஜன்னல்களை உடைத்ததாகவும், தங்கள் குழந்தைகள் உள்ளே சிக்கிக்கொண்டார்களா என்பதைப் பார்க்க பீதியடைந்த பெற்றோர்கள் கார்களில் சம்பவ இடத்துக்கு வேகமாக சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
புகை மற்றும் தீப்பிழம்புகளிலிருந்து பலர் வெளியேறத் தவித்த இந்த தீவிபத்து ஒரு திகில் திரைப்படத்தைப் போல இருந்ததாகவும் கூறப்படுகிறது.
13 ஹெலிகாப்டர்கள், 42 AMBULANCE மற்றும் 150க்கும் மேற்பட்ட மீட்புப்பணி ஊழியர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீவிபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை வன்முறை தாக்குதலுக்கான அறிகுறி ஏதும் இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவசரகால வெளியேறும் வழிகள் தேவையான தரநிலைகளுக்கு ஏற்ப புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது பற்றியும் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், கூட்டம் நிறைந்த பாரில் பரவிய தீ விபத்து ஒரு “எம்பிரேஸ்மென்ட் ஜெனரலைஸ்” (embrasement généralisé) என்று விவரிக்கப் படுகிறது.
இது தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். பற்றி எரியக்கூடிய வாயுக்களால் ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதை ‘ஃப்ளாஷ்ஓவர்’ அல்லது ‘பேக்ட்ராஃப்ட்’ என்று கூறப்படுவது வழக்கம். இந்த தீவிபத்து அந்த வகையால் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கேற்ப சுவிட்சர்லாந்திற்கான இத்தாலி தூதர் ஜியான் லோரென்சோ கொர்னாடோ, யாரோ ஒருவர் BAR -ல் பட்டாசு வெடித்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஷாம்பெயின் பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த ‘பிறந்தநாள் மெழுகுவர்த்திகளில்’ ஒன்றிலிருந்து தீ பரவியது என்றும் கூறப்படுகிறது.
எரியும் ஷாம்பெயின் பாட்டில்கள் வெளியே கொண்டுவரப்பட்ட பிறகு தீப்பிடித்ததைப் பார்த்ததாகவும்,அதன் காரணமாக மளமளவென கூரையில் தீப்பிடித்தததாகவும் தீ விபத்திலிருந்து தப்பித்த இரண்டு பிரெஞ்சுப் பெண்கள், கூறியுள்ளனர்.
வீடியோக்களில், மது பரிமாறுபவர்கள் எரியும் ஷாம்பெயின் பாட்டில்களை உயர்த்திப் பிடித்தபடி கூட்டத்துக்குள் செல்வதும், அவை கூரையைத் தொடும் அளவுக்கு நெருக்கமாக இருப்பதும் தெளிவாக உள்ளன.
மேலும், இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட வாணவேடிக்கைகளே தீவிபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப் படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியான சம்பவம் என்று கூறியுள்ள சுவிட்சர்லாந்தின் அதிபர் கை பார்மெலின் இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வது சுவிட்சர்லாந்தின் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 புதிய கனவுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இது ஒரு கொடூர கனவாக மாறியுள்ளது.
















