வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீப நாட்களில் அமெரிக்க ராணுவம், வெனிசுலாவின் படகுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த படகுகள் மூலம் வெனிசுலாவிலிருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவின் தலைநகர் காரகஸை குறிவைத்து 7 இடங்களில் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், ராணுவ வளாகம் மற்றும் விமானப்படை தளம் ஆகிய முக்கிய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. . நகரின் வான்பரப்பில் போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்ததால் மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.
இதனையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார். மேலும், அப்பாவி உயிர்களை குறிவைத்து குடியிருப்பு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அமெரிக்கா தாக்குதல் வெனிசுலா ராணுவத்திற்கோ, தனக்கோ ஒரு பொருட்டே அல்ல எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்து நாடு கடத்தி உள்ளதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்கச் சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
















