உலகில் தீர்க்க முடியாத நோய்களுக்கான மருந்துகளை கண்டறிய, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 9வது சித்த மருத்துவ தினம், சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அகத்திய மாமுனிதான் சித்த மருத்துவத்தின் கடவுள் என்று போற்றினார்.
மேலும், ஆங்கில மருத்துவ முறையால் நிரந்தர தீர்வு கிடைக்காது என குறிப்பிட்ட அவர், சித்த மருத்துவ முறை பொறுமையாக செயல்பட்டாலும், வேரோடு அழிக்கும் வல்லமை கொண்டது என பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கு, சென்னையில் நிலம் வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் பாரம்பரிய மருத்துவத்திற்காக தனி ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்டதாகவும், சித்த மருத்துவ முறை தற்போது உலகளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தேசிய சித்த நிறுவனம் சார்பில் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
















