வெனிசுலா மீது அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதிபர் மதுரோ மற்றும் மனைவியை சிறைப்பிடித்து நாடு கடத்தியுள்ளது. அதனால், அமெரிக்கா – வெனிசுலா இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வெனிசுலாவின் உண்மையான ராணுவ பலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
வெனிசுலா அரசின் கொடூர அரசியல் நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளை காரணமாக காட்டி, அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை விதித்தது.
சில நேரங்களில் வெனிசுலா மீது பல்வேறு ராணுவ நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவின் செயல்பாடுகளை வெளிநாட்டு தலையீடு என குறிப்பிட்டு வெனிசுலா அரசு கண்டித்து வருகிறது.
அந்நாட்டு மக்களையும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபடுத்தி வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், வெனிசுலா தலைநகர் கராக்காஸ், மிராண்டா, லா குவைய்ரா, அராகுவா பகுதிகளில் இன்று காலை அமெரிக்க விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டதாக வெனிசுலா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தாக்குதலில் லா கர்லோட்டா விமான தளம் மற்றும் ஃபியூர்டி டியூனா ராணுவ தலைமையகம் ஆகியவை குறிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்லோரஸ் ஆகியோரை சிறைபிடித்து நாடு கடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடக வலைதளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்துள்ள டிரம்ப், தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவின் செயலுக்கு ரஷ்யா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கராக்காஸின் ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெனிசுலா அரசு, இதனை “அரசுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்” என வர்ணித்து தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள வெனிசுலா அரசு, அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், உலகளவில் அதிக ராணுவ பலம் வாய்ந்த சக்தியாக விளங்கும் அமெரிக்காவுக்கு சவால் விடும் தொனியில், வெனிசுலா அரசு சூளுரைத்திருப்பது சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறி அந்நாட்டின் படைபலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
தரவுகளை புரட்டிப்பார்க்கும்போது வெனிசுலா ராணுவம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்களை செயல்பாட்டிலும், ஒரு லட்சம் வீரர்களை ரிசர்விலும் கொண்டுள்ளது. இவர்களைத் தவிர 2 லட்சத்து 20 ஆயிரம் தேசிய காவல் படையினரும் வெனிசுலா ராணுவத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, விமானப்படையில் 20 ஆயிரம் வீரர்களையும், கடற்படையில் 25 ஆயிரத்து 500 வீரர்களையும் கொண்டுள்ள வெனிசுலா, ரஷ்யா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கிய பலதரப்பட்ட ஆயுதங்களை தேவைக்கேற்ப தன்னிடம் வைத்துள்ளது.
குறிப்பாக 15 பழைய F16 போர் விமானங்கள், ரஷ்ய தயாரிப்பான 21 சுகோய்-30 போர் விமானங்கள், 173 AMX-13 டேங்கிக்கள், 78 T-72 டேங்கர்கள், S-300, புச்சரா மற்றும் புக் ஏர்-டிபென்ஸ் ஏவுகணைகள் ஆகியவை வெனிசுலாவிடம் உள்ளன.
அதேபோல, அந்நாட்டின் கடற்படையில் ஒரு சபாலோ நீர்மூழ்கி கப்பல், ஒரு இத்தாலி பிரிகேட், 9 கடல் பாதுகாப்பு படகுகள், 25 ஆயுதம் தாங்கி ஸ்பீட் போட்கள் மற்றும் 3 லாண்டிங் படகுகள் உள்ளன. இது தவிர “போலிவாரியன் மிலீஷியா” என்ற அரசுக்கு விஸ்வாசமான துணைப் படையையும் வெனிசுலா கொண்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் அதிபரான ஹூவோ சாவெஸ் இந்த படையை உருவாக்கினார். இந்த படையில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் பயிற்சி பெற்ற வீரர்களும், 2 லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
வருங்காலத்தில் இந்த படையின் எண்ணிக்கையை 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை அதிகரிக்க முடியும் என அதிபர் மதுரோ கூறியிருந்தார். எனினும் பெரும்பாலானோர் போதிய பயிற்சி இல்லாதவர்கள் என்பதால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனால் ஒப்பீட்டளவில் அமெரிக்காவை விட மனித வளத்திலும், தொழில்நுட்பத்திலும், ஆயுதங்களிலும், நிதி நிலையிலும் வெனிசுலா 20 மடங்கு பின் தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகிறது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான நேரடி தாக்குதல்களை தவிர்த்து, சிறிய குழுக்களாக பிரிந்து SABOTTAGE போன்ற கொரில்லா தாக்குதல் முறைகளை வெனிசுலா முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் இவ்விரு நாடுகளிடையே அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















