நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடைபெறும் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் புகார் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அணைப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின் நகராட்சி நிர்வாகம் டெண்டர் விடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி நகராட்சி ஆணையரிடம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆதாயத்திற்காக நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதாக தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து பேருந்து நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஆணையர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
















