தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புதுப்பானைகளில் பொங்கலிட்டு சூரியபகவானை வணங்கிய பொதுமக்கள் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
தைத்திருநாளை கொண்டாடும் விதமாக கோவை மேட்டுப்பாளையம் அருகே பாஜகவினர் பொங்கல் வைத்து விழாவை நடத்தினர். தனியார் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பாரத் மாதகி ஜெ என்ற வெற்றி கோஷத்தை எழுப்பினர். பின்னர் பெண் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நாட்டுப்புற பாடல்களை பாடியும், கும்மியாட்டம் ஆடியும் விழாவை சிறப்பித்தனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொங்கல் விழாவை பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொங்கல் பானையை சுற்றி கும்மியடித்தபடி பெண்கள் நடனமாடினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் விவசாயிகளை கவுரவிப்பதும், தமிழர்களின் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் சிறந்த தலைவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
















