சர்வதேச பட்டம்விடும் திருவிழாவையொட்டி சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் குஜராத் சென்றார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.
இதனை தொடர்ந்து, சபர்மதி ஆசிரம வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரெட்ரிக் மெர்ஸ், ஆசிரமத்தில் உள்ள காந்தி உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தார். இதனை அடுத்து, வளாகத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் ஜெர்மன் அதிபர் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து, சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஜெர்மன் அதிபரும், பிரதமர் மோடியும் கண்டுகளித்தனர்.
பின்னர், சபர்மதி ஆற்றங்கரை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் பாரம்பரியம் மற்றும் அதன் வரலாற்று பெருமைகள் குறித்து ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
இதனை அடுத்து, பிரமதர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றப்படி வானில் வண்ண வண்ண பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இருநாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியப்படி ஆரவாரம் செய்தனர்.
















