ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செயல்படும் கல்குவாரிகளால் யோக நரசிம்மர் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை சுற்றி இருக்கக் கூடிய மலை பகுதிகளில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பாறைகளை உடைப்பதற்கு விதிகளை மீறி அதிக அளவுக்கு வெடி மருந்துகளை வைத்து வெடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கோயிலுக்குள் அதிர்வு ஏற்பட்டு சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
















