வரலாற்றை வேண்டுமென்றே திரித்து காட்டியுள்ள பராசக்தி படத்தை கண்டிப்பாக தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் மாநில துணை தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராசக்தி திரைப்படத்தில் காங்கிரசை அவதூறு செய்யும் நோக்கில் திட்டமிட்டே புனைவு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முழுப் படமும் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ள அவர், காங்கிரஸ் கட்சியை தாக்குவதையே ஒரே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் உண்மைக்கு முற்றிலும் முரணாக உள்ளது எனவும் சாடியுள்ளார்.
‘பராசக்தி’ திரைப்படத்தில் வரலாற்றில் நடக்காத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், திரைப்படத்தின் தயாரிப்புக் குழு பொதுமன்னிப்புக் கோர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பொது மன்னிப்பு கேட்க தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அநீதிக்கு எதிராக அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் குரல் எழுப்ப வேண்டும் எனவும் அருண் பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
















