ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் (Rubina Aminian) ரூபினா அமினியன் என்ற இளம்மாணவி. புரட்சிகர காவல் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். மாணவர் புரட்சியின் அடையாளமாக உருவெடுத்துள்ள இந்த பெண் கொல்லப்பட்ட பின்னணி என்ன ?
கடந்த மாதம் பணவீக்கத்துக்கும், விலைவாசி உயர்வுக்கும் எதிராக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வணிகர்கள் தொடங்கிய போராட்டம், பிறகு மாணவர்கள் போராட்டமாக உருவெடுத்தது.
ஈரானில் உள்ள அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். 13 நாட்களுக்கு மேலாக ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் செலுத்தும் ஈரான் அரசு போராடும் இளைஞர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகிறது.
இதுவரை சுமார் 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த இரத்த களரியை மறைக்க நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய மற்றும் தொலைத்தொடர்பு வசதியும் முடக்கப்பட்டுள்ளது.
தலையிலோ அல்லது கழுத்திலோ சுடப்பட்டு கொல்லப் பட்ட 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களின் இளைஞர்களின் பிணங்களால் ஈரானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிருக்கு போராடும் நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மருத்துவமனைகளில் வந்து விழுகிறார்கள்.
போராட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் சுட்டதில் அதிகமான இளைஞர்கள் இரு கண்களையும் இழந்துள்ளனர். மேலும் பல இளைஞர்கள் ஒரு கண்ணை இழந்துள்ளனர். இந்தச் சூழலில் ஈரானில் கண் மருத்துவ மனைகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.
குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள மரிவான் நகரைச் சேர்ந்த (Rubina Aminian) ரூபினா அமினியன் என்ற 23 வயதுடைய கல்லூரி மாணவி, தெஹ்ரானில் உள்ள ஷரியதி தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மகளிர் கல்லூரியில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் ஃபேஷன் படித்து வந்தார்.
போராட்டங்களில் பங்கேற்பதற்காக கடந்த எட்டாம் தேதி தனது கல்லூரியிலிருந்து வெளியே சென்றார். துரதிர்ஷ்டவசமாக மீண்டும் திரும்பவே இல்லை. மிக அருகிலிருந்து ரூபினா அமினியனின் தலையில் சுட்டு ஈரான் பாதுகாப்புப் படைகள் கொன்றுள்ளன.
ரூபினாவின் மரணத்தை அறிந்து கெர்மன்ஷாவிலிருந்து தெஹ்ரானுக்கு வந்த அவரது குடும்பத்தினர் படாத பாடுபட்டுள்ளனர்.
ரூபினா படித்த கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரூபினாவின் தாயார், அங்கு போராட்டங்களின் போது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உடல்களைப் பார்த்ததாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
முதலில், ரூபினாவின் உடலை அடையாளம் காண அனுமதிக்கப்படவில்லை. பின்னர் உடலைத் தங்களுடன் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ரூபினாவின் உடலுடன் கெர்மான்ஷாவுக்குத் திரும்பியபோது, அவர்களின் வீடு உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்டிருந்தது. தங்கள் குடும்ப மரபு படி, ரூபினாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
ரூபினாவின் உடலை ஒரு முறையான கல்லறையில் புதைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கெர்மான்ஷாவுக்கு அருகிலுள்ள சாலையின் ஒரு ஓரத்தில் உடலைப் புதைக்க பாதுகாப்புப் படையினரால் நிர்பந்திக்கப்பட்டது.
ரூபினாவின் துக்க அனுசரிப்பு விழா நடத்த அருகில் உள்ள மசூதிகளை அணுகிய போது, அதற்கெல்லாம் அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டது.
இவை, மனித மாண்பு மற்றும் கலாச்சார மற்றும் மத மரபுகளின்படி துக்கம் அனுசரிக்கும் உரிமை ஆகியவற்றின் மீதான மீறல்கள் என்று கூறப்படுகிறது.
ரூபினா தலையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவலை ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது. கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிகளும் பின்னால் மிக அருகில் இருந்து ரூபினா சுடப்பட்டதாகவும், தலையில் குண்டு பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளன.
ரூபினா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹானா மனித உரிமைகள் அமைப்பும் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பெண்களின் உரிமைகளுக்காக போராடிய ‘ சுதந்திரத் தாகம் கொண்ட, வலிமையான, துணிச்சலான முடிவுகளைச் சுயமாக எடுக்கக் கூடிய ஒரு கல்லூரி மாணவி இப்போது உயிரோடு இல்லை. அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்.
வாழ்க்கை மீது மிகுந்த மகிழ்ச்சியும், ஃபேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பு மீது பேரார்வமும் கொண்ட ஒரு இளம் பெண்ணின் வண்ணக் கனவுகள், ஈரானின் இஸ்லாமிய வன்முறை ஒடுக்குமுறையால் அழிக்கப்பட்டுள்ளன.
ஈரானில் சர்வாதிகார இஸ்லாமிய அரசுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டங்களில் ரூபினாவின் பெயர் ஒரு சின்னமாக மாறியுள்ளது.
உலகம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்துக்காக ஈரான் இளைஞர்கள் கொடூரமாக கொல்லப் படுகின்றனர் என்பதை நினைவூட்டும் ஒரு அடையாளமாக ரூபினா மாறியுள்ளார். இதுதான் ஈரானின் இன்றைய நிலை. சுதந்திரத்துக்காக ஈரான் இளைஞர்கள் கொடுக்கும் விலை இதுதான்.
















