மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வடமாநிலங்களில் மகர சங்கராந்தி, லோஹரி, சுக்ராத் ஆகிய பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மார்கழி மாத ஏகாதசியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். திரிவேணி சங்கத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் உள்ள நீர்நிலையில் ஏராளமானோர் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.
மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
















