சென்னை பல்லாவரம், காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடிய போலீசாரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பல்லாவரம் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது போலீசார் நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இதையடுத்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களை சேர்ந்த 23 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் பல்லாவரம் காவல் ஆய்வாளர் பழனி குமார் மற்றும் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள் ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 23 போலீசாரும் அந்தந்த காவல் நிலையத்திலேயே தங்களது பணியை மீண்டும் தொடரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் காவல் ஆய்வாளர்கள் மட்டும் காத்திருப்போர் பட்டியலிலேயே தொடர்வார்கள் என்றும் தாம்பரம் காவல்துறை தெரிவித்துள்ளது.
















