சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாகியும் செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பல்வேறு சீர்கேடுகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாத சூழல் உள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தின் மேலவையான செனட் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை கூட்ட வேண்டும் என்ற விதியை பின்பற்றாததால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் பல்கலைக்கழகம் தடுமாறுகிறது எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
செனட் கூட்டம் நடக்காததால் தேர்வுகளை நடத்துவது குறித்து தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு வழிகாட்ட முடியவில்லை என்றும், தேர்வு முடித்தவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இதனால், பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்கள் பணிக்கு செல்லவோ, வெளிநாடுகளுக்குச் செல்லவோ முடியாமல் அவதிப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், செனட் உறுப்பினர்களில் பலர் ஓய்வுபெற்ற நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
















