50 ரூபாய் கட்டணத்தில் சென்னையின் அடையாளமாக திகழும் பகுதிகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் சென்னை உலா பேருந்தில் பயணித்தபடியே பார்த்து ரசிக்கலாம்.. அது என்ன சென்னை உலா பேருந்து……பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் ….
நாகரீக வளர்ச்சியில் ஜெட் வேக தொழில்நுட்ப காலகட்டத்தில் நம் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் தற்போதைய தலைமுறை அறியாமலே கடந்து போகும் நிலை உருவாகி வருகிறது.
அதனை மீட்டெடுக்கும் வகையில் சென்னையின் அடையாளமாக திகழும் 16 இடங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதாரண பேருந்து தொடங்கி ஏசி பேருந்து வரை பார்த்தவர்களுக்கு 1970, 80 காலகட்ட வாழ்வியலை கண்முன் நிறுத்தி முந்தைய தலைமுறையுடன் உலா வருவது போல் உணர்த்துவதுதான் சென்னை உலா பேருந்து.
50 ரூபாய் கட்டணம் செலுத்தி சென்னை சென்ட்ரலில் தொடங்கி பல்லவன் இல்லம் வரை சென்னையின் முக்கிய அடையாளங்களாக திகழும் 16 இடங்களை இந்த விண்டேஜ் பேருந்து மூலம் சுற்றி பார்க்கலாம்.
சென்னை சென்ட்ரல், பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவு சின்னம், தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், பல்லவன் இல்லம் என மாநகரின் 30 கி. மீ தொலைவில் 16 இடங்களை பார்வையிடும் வகையிலும் அவற்றின் வரலாறை நினைவு கூறும் விதத்திலும் சென்னை உலா பேருந்து அமைந்துள்ளது .
“Hop on Hop off” முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் விருப்பமான இடத்தில் இறங்கி பார்வையிட்டு 30 நிமிட இடைவெளியில் வரும் அடுத்த பேருந்தில் ஏறி பயணிக்கலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்ட சென்னை உலா பேருந்து இனி வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், சென்னையின் அடையாளங்களை கண்டு வியக்கவும் சென்னை உலா பேருந்து ஒரு வரப் பிரசாதம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
















