தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை செயலகம் வந்தார். அப்போது அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டப்பேரவையின் கூட்ட அரங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது அங்கு நின்றபடி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் வணக்கம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கியது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.
பொதுவாக, ஆளுநரின் உரை நேரலையாக காண்பிக்கப்படும் நிலையில், இன்றைய கூட்டத்திற்கு நேரலை வழங்கப்படவில்லை. அதேபோன்று, செய்தியாளர்களின் அறையில் இருந்த மைக் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
















