தஞ்சாவூர் அருகே பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் கோயிலில் தை மாத சிரவண தின தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநாகேஸ்வரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் சிரவண தினத்தன்று தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற தெப்ப திருவிழாவையொட்டி, உற்சவ மூர்த்திகளான பொன்னப்பன், பூமாதேவி தயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த உற்சவ மூர்த்திகள், தேசிகருடன் பகலிரா பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
குளத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்த பெருமாளையும், தாயாரையும் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு மனமுருகி வழிபட்டனர்.
















