வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் என்ற மூதாட்டி தனிமையில் வசித்து வந்த நிலையில், சுங்கச்சாவடி அருகே ஏரிக்கரையோரம் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி ஏரிக்கரையோம் உள்ள தனது மாட்டுத் தொழுவத்திற்கு சென்ற மூதாட்டியை படுகொலை செய்து 5 சவரன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மொபைல் ஆப் மூலமாக பெற்ற கடனை அடைக்க பணம் இல்லாததால் மூதாட்டியை கொன்று அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும், செயினை விற்பனை செய்து அதில் வந்த பணத்தில் லோனை கட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, முருகனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















