அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், குடியரசு கட்சி தோல்வியடைந்தால், ட்ரம்பின் சாம்ராஜ்யம் சரியும் என கூறப்படுகிறது. அவரது அதிகாரம் பெருமளவில் பறிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் ஒட்டுமொத்த உலகையும் படாதபாடு படுத்திவருகிறார். அவரது ஆட்சி முழுமையாக நிறைவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. துல்லியமாக கூறுவதென்றால், ஆயிரத்து 96 நாட்கள்.
அத்தனை நாட்களுக்கு ட்ரம்பின் “முட்டாள்தனமான” ஆட்சியை சகித்துக்கொள்ள வேண்டுமா என பதறுபவர்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் மட்டும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஏகபோக வெற்றி பெற்றுவிட்டால், ட்ரம்பின் அனைத்து அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள சுமார் 35 இடங்களுக்கும் நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அத்துடன் அமெரிக்காவின் 36 மாகாணங்களின் ஆளுநர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலும், பல மாகாணங்களில் உள்ளூர் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலும் அதே நாளில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மை பெற்றால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர்களின் கை ஓங்கும். அவ்வாறு ஓங்கினால் சர்வ நிச்சயமாக அவர்கள் ட்ரம்புக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓரளவு பெரும்பான்மை உள்ளதால்தான், ட்ரம்ப் கொண்டு வரும் சட்டங்கள் நிறைவேறி வருகின்றன.
ஆனால், ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் இந்த நிலை இனி நீடிக்காது. ட்ரம்ப் கொண்டு வரும் அனைத்து தேவையற்ற சட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடப்படும். அவ்வாறு நிகழ்ந்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ட்ரம்ப் விஷமில்லாத பாம்பாகத்தான் இருப்பார் என கூறப்படுகிறது.

அதேபோல, ஜனநாயக கட்சியினர் வெற்றிப்பெற்றால் அவர்களால் நாடாளுமன்ற குழுக்களின் தலைமை பொறுப்புகளையும் கைப்பற்ற முடியும். அதன் மூலம், ட்ரம்பின் நிர்வாகம், கொள்கைகள், அவரது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து அவர்களால் விசாரணையும் நடத்த முடியும்.
அமெரிக்காவில் நிதி தொடர்பாக ஏதாவது சட்டம் இயற்ற வேண்டும் என்றால், அதற்கு பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் தேவை. எனவே, அந்த சபையிலும் எதிர்க்கட்சியினர் வலிமை பெற்றால், ட்ரம்பின் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இப்படி, அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்பின் கட்சி தோற்றால் என்ன நிகழும் என்பது குறித்து பட்டியல் போட்டுக்கொண்டே செல்லாம்.
இதை கேட்கும்போதே பலருக்கு காதில் தேன் பாயும். ஆனால், ட்ரம்பின் கட்சி தோல்வியடைவது சாத்தியமா???… சாத்தியம்தான் என அடித்து கூறுகிறது, கருத்து கணிப்பும், கடந்த கால தேர்தல் வரலாறும்.
தமிழகத்தில் இடைதேர்தல் நடைபெற்றால், பெரும்பாலும் ஆளும்கட்சிதான் பெற்றிப்பெறும். ஆனால், அமெரிக்காவில் அப்படியல்ல. அந்நாட்டில் இடைக்காலத் தேர்தல்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.
1946ம் ஆண்டு முதல் இன்று வரை அமெரிக்காவில் 20 இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 18 தேர்தல்களில் எதிர்க்கட்சிதான் வெற்றி வாகை சூடியுள்ளது. இது குறித்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தி கான்வெர்சேஷன் நிறுவனம் தெளிவான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Robert A Strong, ஐசனோவர், ஜான் எஃப் கென்னடி, ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்ட் ஃபோர்டு, ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் போன்ற பிரபலமான அமெரிக்க அதிபர்கள் கூட, இடைக்காலத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படி அமெரிக்காவின் கடந்த கால தேர்தல் வரலாறு, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. இதனையும் மீறி, இடைக்காலத் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்றால் ட்ரம்ப் அதிகப்படியான மக்கள் செல்வாக்கை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய செல்வாக்கு தனக்கு உள்ளதாக ட்ரம்பே நம்ப மாட்டார்.
ட்ரம்பின் 2.0 ஆட்சியில் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திலும் 1,100 முதல் 1,600 டாலர் வரை செலவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இது அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என, பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக் நிறுவனத்தை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர் புள்ளியியல் அலுவலக தகவல்களின்படி, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டின் இறுதியில் 4.1% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை, 2025 நவம்பரில் 4.6% ஆக உயர்ந்துள்ளது. இத்தகைய காரணங்களால் அமெரிக்க மக்கள் ட்ரம்பிற்கு எதிரான மனநிலையில்தான் உள்ளனர்.

Real Clear Polling போன்ற பிரபல நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படி, அமெரிக்காவின் கடந்த கால தேர்தல் வரலாறு, மக்கள் மனநிலை, கருத்து கணிப்பு என அனைத்துமே ட்ரம்பிற்கு எதிராகவே உள்ளன.
ஆகவே, இந்தாண்டு நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் அவரது கட்சி மகத்தான தோல்வி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறு நடந்தால், தொடக்கத்திலேயே கூறியது போல ட்ரம்ப்பின் விஷப்பல் பிடுங்கப்படும்.
அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் அத்தகையதொரு நாளுக்காகத்தான் தவமாய் தவமிருக்கின்றன.
















