ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தைத்
தொடங்கினர். அப்போது வன்முறை வெடித்த நிலையில், போராட்டக்காரர்களை அடக்க நினைத்தால் கடும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்திருந்தார்.
அதற்கு சவூதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் இஸ்ரேலை குறிவைத்து நினைத்து பார்க்க முடியாத தாக்குதலை நடத்துவோம் என ஈரானும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சிமாநாடு நிகழ்வுகளை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட டிரம்ப், விமானத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
அவர்களை தாக்குவதில் விருப்பமில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
டிரம்ப்பின் நடவடிக்கையால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளுமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
















