பெரம்பலூர் அருகே ரவுடியை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பயங்கரமாக அமைந்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெள்ளை காளியை காவல்துறையினர், திண்டுக்கல் துணைச் சிறையில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கார்களில் துரத்தி வந்த மர்ம நபர்கள், வெள்ளை காளியை கொலை செய்வதற்காக காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தொடர்ந்து, வெள்ளை காளியை அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காவலர்கள் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தவே, அந்த கும்பல் திருமாந்துறை சுங்கச்சாவடியின் தடுப்பை உடைத்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றது.
அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், குற்றவாளிகள் அதற்குள் கார்களை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்திவிட்டு தப்பியோடினர். பின்னர், குற்றவாளிகளைத் தேடி அங்கு சென்ற போலீசார், வாகனத்தையும், அதிலிருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், காவலர்கள் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு, இந்த குற்றச்செயலை தடுத்து நிறுத்தியிருப்பதாகவும், தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருபதாகவும் தெரிவித்தார்.
















