சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 77வது குடியரசு தினவிழா தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் வருகை தந்தார். அப்போது, ஆளுநரை விமானப்படையினர் இருசக்கர வாகனத்தில் புடைசூழ அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
பின்னர், மேடை அருகே இருந்த கம்பத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
இதனை தொடர்ந்து, ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவையும் அணிவகுத்து சென்றன.
மேலும், சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 30 படைப்பிரிவினரும் அணிவகுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றவர்கள் முதலமைச்சருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கர்நாடகாவின் லம்பானி, ராஜஸ்தானின் சாரி நடனம், அருணாச்சலப் பிரதேசத்தின் ஜூஜூஜா கிராமிய கலை நிகழ்ச்சியை சிறப்பு விருந்தனர்கள் கண்டு ரசித்தனர்.
மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பெரிய மேளம் தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்தனர்.
இறுதியாக, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உட்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் கூடிய அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன.
இதனை தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு குடியரசு தின விழா நிறைவு பெற்றது. பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் வழியனுப்பி வைத்தார்.
















