வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அப்போது முதலே அந்நாட்டில் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம் 18ம் தேதி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் நடுவே வைத்து எரிக்கப்பட்டது.
அந்த சம்பவம் வங்கதேசத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, மணி சக்ரவர்த்தி என்ற மளிகை கடை உரிமையாளரும், சமீர் குமார் தாஸ் என்ற ஆட்டோ ஓட்டுநரும், ராணா காந்தி பைராகி என்ற பத்திரிகையாளரும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், துப்பாக்கியால் சுடப்பட்டும், வன்முறை கும்பலால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டும், எரித்தும் கொலை செய்யப்பட்டனர்.
HRCBM என்ற அமைப்பின் கணக்கின்படி, வங்கதேசத்தில் கடந்த 7 மாதங்களில் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை மட்டும், 15 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தகைய படுகொலைகளால் அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த சூழலில்தான், வங்கதேச இந்து மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும்படியான சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகே Narsingdi என்ற நகர் உள்ளது. அங்குள்ள வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் சஞ்சல் பௌமிக் என்ற 23 வயது இளைஞர் வேலை பார்த்து வந்தார்.
இவர் லக்ஷ்மிபூர் என்ற கிராமப்புற பகுதியை சேர்ந்தவர். கடந்த 23ம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு, சோர்வு காரணமாக கேரேஜிலேயே உறங்கியுள்ளார். அப்போது திடீரென தீ பரவவே, அவர் உள்ளே சிக்கிக்கொண்டார்.
பெட்ரோல், என்ஜின் ஆயில் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் இருந்ததால், தீ மளமளவென பரவ தொடங்கியது.
பொதுமக்களும், தீயணைப்புத்துறையினரும் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சஞ்சல் பௌமிக் உயிரிழந்திருந்தார். அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது உடல் சிதைத்திருந்தது.
முதலில், இந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்த தீவிபத்து என்றுதான் கருதப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரிய வந்தது.
சம்பவம் நடந்த அன்று இரவு, மர்மநபர்கள் சிலர் கேரேஜை வெளியே இழுத்து பூட்டியுள்ளனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி கேரேஜை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கேரேஜூக்கு தீவைப்பதற்கு முன்னால், வன்முறை கும்பல் உள்ளே சென்று சஞ்சல் பௌமிக்கை கொடூரமாக தாக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சஞ்சல் பௌமிக்கின் குடும்பத்தினர், இது ஒரு திட்டமிட்ட படுகொலை எனவும், குற்றவாளிகளுக்கும் கடுமையாக தண்டனையை பெற்று தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்துடன் சேர்த்து, வங்கதேசத்தில் 2 மாதங்களில் கொலை செய்யப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
இந்த தொடர் கொலைகளை தடுக்க, முகமது யூனுஸ் தலைமையிலான அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
இன்னும் 2 வாரங்களில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. புதிதாக அமையவுள்ள அரசாவது, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு இந்து மக்கள் உள்ளனர்.
















