தென்சீன கடலில் உள்ள ப்ளூ ஹோல் எனப்படும் கடல் பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்து 700 வகையான புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகில் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த எத்தனையோ இடங்கள் உள்ளன. பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம், பெரு நாட்டில் அமைந்துள்ள நஸ்கா கோடுகள், ஜப்பானில் உள்ள யோனகுனி நினைவுச்சின்னம், சிலியில் உள்ள ஈஸ்டர் தீவு, இங்கிலாந்தில் உள்ள Stonehenge உள்ளிட்டவை அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகள்.
கடலுக்கு நடுவே உள்ள ப்ளூ ஹோல்களும் அத்தகையவைதான். மர்மமும், ஆச்சரியமும் நிறைந்தவை. நிலப்பகுதியில் உள்ள பெரிய அளவிலான பள்ளங்கள் சிங்க் ஹோல்கள் என குறிப்பிடப்படுகின்றன. அதுவே, அத்தகைய பள்ளங்கள் கடலில் இருந்தால் அவை ப்ளூ ஹோல்கள் என அழைப்படுகின்றன.
பல மீட்டர்கள் ஆழமும், அகலமும் கொண்ட இந்த பள்ளங்களின் சுற்றுப்புறத்தில் பெரும்பாலும் பவளப்பாறைகளும், உள்ளே சுண்ணாம்பு பாறைகளும் இருக்கும். ப்ளூ ஹோல்களின் உள்ளே ஆக்சிஜன் இருக்காது என்பதால், அங்கே எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.
உலகில் இதுவரை நூற்றுக்கணக்கான ப்ளூ ஹோல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பஹாமாஸ், எகிப்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கடற்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ப்ளூ ஹோல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
20ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய கடற்பள்ளங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இவை பாதாள உலகத்திற்கு செல்வதற்கான வழி என மாயன்களும், ட்ராகன்களால் ஆளப்படும் பகுதி என சீனர்களும் கருதி வந்தனர்.
இந்த சூழலில்தான், 1971ம் ஆண்டு அமெரிக்காவின் பெலீஸ் பகுதியில் உள்ள கடல் பள்ளத்தில், Jacques Cousteau என்பவர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில்தான், ப்ளூ ஹோல்கள் குறித்து உலகத்திற்கு தெரிய வந்தது. Jacques Cousteau கண்டுபிடித்த அந்த ப்ளூ ஹோல், கிரேட் ப்ளூ ஹோல் என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ப்ளூ ஹோல்களில் ஒன்றாகவும் அது விளங்குகிறது.
இந்த அனைத்து ப்ளூ ஹோல்களும் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ் ஏஜ் காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த சமயத்தில் தரைப்பகுதியில் இருந்த சிங்க்ஹோல் கடலால் சூழப்பட்டு, ப்ளூ ஹோல்களாக மாறியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த சூழலில், தென்சீனக்கடலில் உள்ள ட்ராகன் ஹோல் எனப்படும் ப்ளூ ஹோலில் இறங்கி அண்மையில் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 1,700 வகையான வைரஸ்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் எவையும் இதுவரை அட்டவணைப்படுத்தப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்களின் கண்டுபிடிப்பு, மருத்துவ உலகிலும், உயிரியல் துறையிலும் புதிய ஆய்வுக்கு வித்திட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது எனவும், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்குதான் அவை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விளக்கம் அளித்துள்ளனர். வைரஸ்களை தவிர்த்து 294 விமான நுண்ணுயிர்களும் இந்த டிராகன் ஹோலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 சதவீதத்திற்கு மேற்பட்டவை மருத்துவ உலகத்திற்கு புதியவை.
சூரிய ஒளியும், ஆக்சிஜனும் இல்லாத இடத்தில் இத்தனை வகையான வைரஸ்களும், நுண்ணுயிர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று மற்ற ப்ளூ ஹோல்களிலும் ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
















