சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் ஒரு அரசாங்கம், இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு சனாதன மரபுகளைப் பின்பற்றுபவர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர் என்றும், சனாதன தர்மத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதன் கொள்கைகளின்படி ஆட்சி செய்யும் ஒரு அரசை எதிர்பார்த்தனர் எனவும் கூறினார்.
சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது எனக்கூறிய அவர், சனாதன தர்மத்தின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், 370வது பிரிவை ரத்து செய்தல், முத்தலாக் ஒழிப்பு மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற பாஜக அரசின் முக்கிய முடிவுகள் இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்கான உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.
















