மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த நிலையில், அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகாராஷ்டிராவில் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க அஜித் பவார் திட்டமிட்டிருந்தார்.
தனது சொந்த தொகுதியான பாராமதியில் நான்கு தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் பாராமதிக்கு அஜித் பவார் கிளம்பியுள்ளார்.
பாராமதியில் தனி விமானம் தரையிறங்கும் போது, விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. காலை 8:48 மணிக்கு நிகழ்ந்த இந்த எதிர்பாராத விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததைச் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான சிறிய ரக தனி விமானத்தில் அஜித் பவார் உடன் பயணம் செய்த அவரது தனி உதவியாளர், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் தலைமை விமானி மற்றும் துணை விமானி உட்பட மொத்தம் 5 பேரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பாராமதியில் விபத்துக்குள்ளான தனி விமானம் பாம்ப்பார்டியர் லியர்ஜெட் 45 விமானம் ஆகும். இது 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த லியர்ஜெட் 45 விமானம் VT-SSK என பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் உட்பட இந்த நிறுவனம் மொத்தம் 17 லியர்ஜெட் 45 விமானங்களை இயக்கி வருகிறது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை 2011ஆம் ஆண்டு விஜய் குமார் சிங் மற்றும் ரோஹித் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது வணிகப் பயணங்கள் மற்றும் மருத்துவ அவசரப் போக்குவரத்துச் சேவைகளுக்காக சார்ட்டர் சேவைகளை வழங்கும் இந்நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருகின்றனர்.
டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் போபால் ஆகிய நகரங்களிலிருந்து செயல்படும் இந்த நிறுவனம் ஒரு 24 மணி நேர விமான சேவை நிறுவனம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
லியர்ஜெட்-45 என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பெரும்பாலும் வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படும் விமானமாகும்.
ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க கூடிய இந்த விமானத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
இலகுரக வணிக ஜெட் விமானமான இந்த விமானம், பொதுவாக கார்ப்பரேட் மற்றும் விஐபிகளின் பிரத்யேக பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய விமானத் தரவு மற்றும் காக்பிட் குரல் பதிவுக் கருவிகளை மீட்டுள்ள நிலையில், விமானக் குழுவினரின் தகவல் தொடர்பு, விமான அமைப்புகள் மற்றும் தரையிறங்கும் நேரத்தின் வானிலை தரவுகளையும் ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன.
முன்னதாக, ஏற்கெனவே 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நிறுவனத்தின் VT-DBL என பதிவு செய்யப்பட்ட லியர்ஜெட் 45XR விமானம், விசாகப்பட்டினத்திலிருந்து வரும்போது மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விரைவாக விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 8 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
முதல்கட்ட விசாரணைகளில் விபத்து நடந்த நேரத்தில் புனே-பாராமதி பகுதிக்கு மேல் பார்வைத் திறன் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இது இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) இல்லாத பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறங்குவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ILS இல்லாத நேரத்தில் விமானிகள் ஓடுபாதையில் விமானத்தைச் சரியாக தரையிறக்க கையேடு மற்றும் பார்வை நுட்பங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
தனது முதல் முயற்சியில் நேரடியாக ஓடுபாதையை அணுக முடியாத நிலையில் ஒரு பெரிய வளைவை எடுத்த விமானம் தரையிறக்கத்தை முதல் முறை கை விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்து விமானத்தை இரண்டாவது முறை தரையிறக்க முயற்சி செய்த விமானி, ‘மேடே’ என்ற அவசர அழைப்பை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பிறகு, சுமார் 100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் சமநிலையை இழந்து,ஓடுபாதைக்கு முன்பாக தரையில் மோதி வெடித்தது என்றும், தொடர்ந்து சரவெடி போல் வெடித்து சிதறிய விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் கட்ட பகுப்பாய்வு முடிந்ததும் ஒரு முறையான முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















