இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் விளம்பரங்களை பதிவிடுவதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 27 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நள்ளிரவில் திடீரென முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது, அந்தப் பக்கம் கிடைக்கவில்லை என்று காண்பித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்ற சில ரசிகர்கள், அண்ணாவின் கணக்கு எங்கே போனது? என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டனர்.
பின்னர் பல மணி நேரத்துக்கு பிறகு வெள்ளிகிழமை காலையில் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார் என சிலர் விவாதித்தனர்.
அந்தவகையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் விளம்பரங்களை பதிவிடுவதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.
















