நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மாமியார், மாமனார் கொடுமையால் மருமகள் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சிவபாலன் கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார். இவருக்கு காவியா என்ற மனைவியும் 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி அரசு பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் நிலையில் தந்தை பழனித்துறை சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மாமியார், மாமனார் இருவரும் காவியாவை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கணவர் சிவபாலன் தனது மனைவி காவியாவை அருகில் உள்ள அவரது தாயார் வீட்டில்கொண்டு போய் விட்டுள்ளார். தாய் வீட்டில் இருந்த காவியா, 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் காவியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தனது மரணத்திற்கு மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர்தான் காரணம் என்று கூறியுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாமியார் செந்தமிழ்ச்செல்வியை கைது செய்ததோடு மாமனார் பழனிதுரையை தேடி வருகின்றனர்.
















