கிராமத்தின் எளிய வாழ்க்கை முறையால் உலகளாவிய கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார். எந்தவித ஆடம்பரமும் இன்றி இன்ஸ்டா ரீல்ஸ் மூலம், தனது அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களை பகிர்ந்து லட்சக்கணக்கான மக்களின் மனதை அவர் வென்றுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒரு அமைதியான கிராமத்தில், மிக எளிமையான வாழ்க்கையை வாழும் ஒரு இல்லத்தரசி இன்று சமூக ஊடகங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். கிழக்கு மிட்நாபூர் பகுதியைச் சேர்ந்த பூஜாரிணி பிரதான் என்ற அந்த பெண், இன்ஸ்டாகிராமில் தனது அன்றாட வாழ்வின் சாதாரண தருணங்களைப் பகிர்ந்ததன் மூலம் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மனதை வென்றுள்ளார். நகர வாழ்க்கையின் அலங்காரங்களோ, தொழில்முறை படப்பிடிப்புகளோ இல்லாமல், இயல்பான சூழலில் உருவாகும் அவரது காணொளிகளே அவரை தனித்துவமாக்கியுள்ளன.
அந்த பதிவுகளில் சிறுமியாகத் தொடங்கி, பெண்ணாகவும், பின்னர் தாயாகவும் கடந்து வரும் தனது வாழ்க்கைப் பயணம் பற்றி அவர் கூறுகிறார். சமைத்தல், வாசித்தல், வீட்டுப் பொறுப்புகள், குழந்தையுடன் செலவிடும் நேரம் என இவை அனைத்தையும் எவ்வித ஆடம்பரமுமின்றி பகிர்வதே அவரது ரீல்ஸுகளை வைரலாக்குகின்றன. அமைதியான முறையில் மிகத் தெளிவாக அவர் பேசும் ஆங்கிலம், காண்போரை கவர முயல்வதுபோல் அல்லாமல் மிக இயல்பாக இருப்பது கூடுதல் சிறப்பு.
புத்தகங்கள் அவரது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. தன் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் நூல்கள், உலகத்தை அறிந்து கொள்ள உதவியதாகவும், அவை தனது தன்னம்பிக்கையையும், மொழித் திறனையும் வளர்த்ததாகவும் பூஜாராணி குறிப்பிட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையின் சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். வீட்டில் தனது கணவர் செய்து கொடுத்த ஒரு சிறிய பொருளை, பூஜாராணி மகிழ்ச்சியுடன் காட்டும் தருணம் அவர்களின் உறவின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.
பூஜா ராணியின் பதிவில் பருவத்திற்கு ஏற்ற பாரம்பரிய சமையல், முதல் முறையாக சமைக்கும் புதிய உணவு, அருகில் விளையாடும் குழந்தை என அனைத்தும் இயல்பாக பதிவு செய்யப்படுகின்றன. அதனால் அவரது காணொளிகள் பார்ப்பவர்களுக்கு மிகவும் உண்மையானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் தோன்றுகின்றன.
அதேபோல, தனது வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் ஒளிவுமறைவின்றி பகிரும் பூஜாராணி, இளம் வயதில் திருமணம் செய்து கொண்டது முதல் குடும்பப் பொறுப்புகளுடன் போராடும் தினசரி அனுபவங்களை தனது பதிவுகளில் கூறி வருகிறார். அவற்றையெல்லாம் ஒரு குறையாக அல்லாமல், பல பெண்களின் நிஜ வாழ்வை பிரதிபலிக்கும் உண்மை சம்பவங்களாகவே அவர் பேசுகிறார். கிராமங்களில் இன்னும் நீடித்து வரும் சில பழைய நடைமுறைகள் பற்றியும், சிந்திக்க வைக்கும் வகையில் அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், தான் எதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்ற கேள்விக்கும் அவர் நேர்மையாக பதிலளித்துள்ளார். சமூக ஊடகங்களில் தோன்றும் பெண்களைப் பற்றி கிராமங்களில் ஏற்படும் விமர்சனங்களிலிருந்து தன்னை ஓரளவு விலக்கிக் கொள்ளும் ஒரு வழியாக அந்த மொழியைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் அமைதியான வாழ்க்கையை, உலகம் முழுவதும் உள்ள மக்களால் ரசிக்க வைக்க முடியும் என்பதை இதன் மூலம் பூஜாரிணி நிரூபித்துள்ளார். ஆடம்பரமோ, செயற்கைச் சாயலோ இல்லாமல், எளிமை மற்றும் உண்மைத்தன்மை மட்டுமே அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது. அவரது பயணம், கிராமத்து வேர்களை தக்கவைத்துக் கொண்டே உலகுடன் உரையாடும் ஒரு இந்திய பெண்ணின் மென்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.
















