திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூரில், பொன்னர் – சங்கர் கோயில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வேடுபறி விழா கோலாகலமாக நடைபெற்றது.
பெரியக்காண்டியம்மன் கோயிலில் இருந்து சாம்புவன் காளை முன்னே செல்ல, பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் பொன்னர் கையில் அம்பு ஏந்தியபடி செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து வெள்ளை யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் அமர்ந்து செல்ல, தங்காள் குடத்தில் தீர்த்தம் எடுத்துச் சென்று, அனியாப்பூர் குதிரைக்கோயிலில் அம்பு போடும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மலர்களைத் தூவி அருள்பெற்றனர். நாளை காலை பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.
















