ஈரானின் உச்ச தலைவரான கமேனியை அமெரிக்காவும், இஸ்ரேலும் எப்படி கொன்றன? அவர் இருக்கும் இடம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? பிப்ரவரி 28ம் தேதி அவர் கொல்லப்பட காரணம் என்ன?… பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
வெனிசுலாவிற்குள் நுழைந்து, அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்ய 2 மணிநேரம் 20 நிமிடங்களை மட்டுமே அமெரிக்கா எடுத்துக்கொண்டது. ஒரு நாட்டின் தலைவரை இத்தனை குறைவான நேரத்தில் அமெரிக்கா கைது செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சரியம் அடங்குவதற்குள், ஈரானின் உச்ச தலைவரான கமேனியை வெறும் 2 மணிநேரம் 5 நிமிடங்களில் இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளன.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் கமேனி பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இஸ்ரேல், கடும் கண்டனத்தை பதிவு செய்தது. ஈரான் மட்டும் அணுஆயுதங்களை தயாரித்துவிட்டால், முதல் தாக்குதலை தங்கள் மீதுதான் நடத்தும் எனவும் இஸ்ரேல் அச்சம் தெரிவித்தது.
ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சிக்கு அமெரிக்காவும் எதிர்ப்பை பதிவு செய்தது. யுரேனியத்தைச் செறிவூட்டி அணுஆயுதங்கள் தயாரிப்பதை கைவிட வேண்டும் எனவும், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால், கமேனி அதனை சிறிதும் சட்டை செய்யவில்லை. எனவே, ஈரான் மீது தாக்குதல் நடத்தி கமேனியை கொலை செய்ய அமெரிக்காவும், இஸ்ரேலும் முடிவெடுத்தன. இதற்காக அந்த இரு நாடுகளும் இரவு, பகலாக வியூகங்களை வகுக்க தொடங்கின.
அமெரிக்காவும், இஸ்ரேலும் தன்னை குறிவைத்து விட்டன என்பதை அயதுல்லா அலி கமேனியும் நன்கு அறிந்தே இருந்தார். அதனால், லவிசான் (Lavizan) என்ற பகுதியில் உள்ள அதிநவீன பதுங்கு குழிக்குள் சென்று அவர் வசிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
பதுங்கு குழிக்குள் இருந்தபடி செல்போன், கணினி உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் தான் இருக்கும் இடம் வெளியே கசித்துவிடும் என்பதால், அவற்றைகூட கமேனி பயன்படுத்தவில்லை எனவும், யாராவது கமேனியை சந்திக்க வேண்டும் என்றால், கண்களை கட்டிதான் அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை ஈரான் இன்டர்நேஷனல் (Iran International) என்ற செய்தி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
மறுபுறம், கமேனி உள்ள இடத்தை கண்டுபிடிக்கும் பணியில், இஸ்ரேலின் மொசாத்தும், அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் முழுமூச்சாக இறங்கின. கமேனி வெளியிட்ட வீடியோக்களின் தரம் மற்றும் பின்னணி ஒலிகளை ஆய்வு செய்தன. Low-orbit satellites எனப்படும் குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை கொண்டும், Drones மூலம் முக்கிய இடங்களை தொடர்ந்து கண்காணித்தன.
பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு, கமேனி தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் உறுதி செய்தன. இதனையடுத்து, பிப்ரவரி 28ம் தேதி காலை 6 மணியளவில் இஸ்ரேலில் இருந்து ஏவுகணைகள் ஈரானை நோக்கி செலுத்தப்பட்டன. அன்றைய தினம் தெஹ்ரானில் உள்ள Leadership House Compound எனப்படும் தலைமை இல்ல வளாகத்தில் கமேனி இருந்தார். ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன் அவர் அப்போது ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே (Aziz Nasirzadeh), ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மௌசாவி (Abdolrahim Mousavi), முப்படைக் தலைமைத் தளபதி முகமது பாகேரி (Mohammad Bagheri) உள்ளிட்ட 40 உயரதிகாரிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் “செபா வாலி-ஏ அம்ர்” (Sepah Vali-e Amr) என்ற சிறப்பு ராணுவப் பிரிவு ஈடுபட்டிருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை கண்காணிக்க சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன.
ஆனால், அந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, காலை 9.30 மணியளவில் இஸ்ரேலின் ஏவுகணைகள் அந்த கட்டடத்தை துல்லியமாக தாக்கின.
இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச அதிபரான கமேனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சேர்த்து, பாதுகாப்புத் துறை அமைச்சர், தரைப்படைத் தளபதி, முப்படைக் தலைமைத் தளபதி, உளவுத்துறை அதிகாரிகள், கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, மகள், மருமகன், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி யூதர்களின் முக்கிய பண்டிகையான பூரிம் (Purim) என்ற பண்டிகை தொடங்குகிறது. பண்டைய காலத்தில் ஈரானில் இருந்த யூதர்களை அழிக்க ஹமான்(Haman) என்பவர் திட்டம் தீட்டினார். அவரிடம் இருந்து யூதர்கள் தப்பித்ததையும், ஹமான்(Haman) கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் வகையில் இந்த பூரிம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை தொடங்குவதற்கு சரியாக 2 நாட்களுக்கு முன்னதாக, கமேனி கொல்லப்பட்டுள்ளார். யூதர்களுக்கு எதிராக அன்று ஹமான் இருந்ததுபோல, இன்று கமேனி செயல்பட்டதாகவும், அதனால்தான் அவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















