ஸ்பெயினின் கிரனாடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மீன் செதில்களில் இருந்து குறைந்த செலவில் செயற்கை கருவிழிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கண்ணின் முன்பகுதியான கருவிழி கடுமையாகப் பாதிக்கப்பட்டால், பார்வை இழப்பு ஏற்படும். இதற்கு தற்போது கண் தானம் மட்டுமே தீர்வாக உள்ளது.
ஆனால், தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பலரும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. சந்தையில் மலிவாகக் கிடைக்கும் மீன்களின் செதில்களில் இருந்து இந்தச் செயற்கை கருவிழியைத் தயாரிப்பதன் மூலம், இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க முடியும். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு மீன் இனங்களின் செதில்களை பயன்படுத்தி இதனை உருவாக்கி உள்ளனர்.
இவை அதிக ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவையாகவும், மிகவும் உறுதியானவையாகவும், மனித திசுக்களுடன் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
கருவிழி என்பது ரத்த நாளங்கள் இல்லாத ஒரு பகுதி என்பதால், அது சேதமடைந்தால் தானாகவே குணமடைவது கடினம். இந்தத் தயாரிப்பு மிக எளிதாகக் கிடைக்கக்கூடியது மற்றும் செலவு குறைவானது என்றும் உள்ளூர் மீன்பிடித் தொழிலுக்கும் இது ஊக்கமளிக்கும் என்றும் கிரனாடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்க்ரிட் கார்சோன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, விழிவெண்படல பாதிப்பால் பார்வை இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கூறப்படுகிறது.
















