இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 29 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தை சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்பவர், இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குநரான மிக் அட்கின்ஸ் என்பவர், அடிக்கடி ஹேய்ஸை பார்த்து உருளைக்கிழங்கு என்றும், அயர்லாந்து மக்களை குறிக்கும் Paddy, Stupid Paddy போன்ற சொற்களை பயன்படுத்தியும் கிண்டல் செய்துள்ளார். சுமார் 6 மாத காலம் நீடித்த இந்த தொடர் கிண்டல்களால் பெர்னாரெட் ஹேய்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம், உருளைக்கிழங்கு என்ற சொல்லை ஒருவரின் பூர்வீகத்தை வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன ரீதியான துன்புறுத்தல் என தீர்ப்பளித்தது. ஆகையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது மன உளைச்சல் மற்றும் வருமான இழப்புக்காக இந்திய மதிப்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பான செய்தியை கண்ட நெட்டிசன்கள், கிண்டல் செய்ததற்காக இந்தியாவில் வழக்கு தொடர்ந்தால் பல முதலாளிகள் இழப்பீடு கொடுத்தே திவாலாகும் நிலைக்கு தள்ளப்படுவர் என வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.
















