உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, மே ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா நடத்துவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து சித்திரைத் திருவிழாவுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, நடப்பாண்டிற்கான சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஏப்ரல் 26-ம் தேதி மீனாடி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 28-ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், 29-ம் தேதி திருத்தேரோட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்று, மே ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டும் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
















