அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள போர், அண்டை நாடான ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
போர் காரணமாக ஈரான் ராணுவம் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக முக்கிய வர்த்தகப் பாதைகளை துண்டித்துள்ளதுடன், எண்ணெய் ஏற்றுமதியையும் வெகுவாகக் குறைத்துள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வருமானத்திற்கு ஆதாரமாக விளங்கும் தெற்கு ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் நின்றுபோயுள்ளது என்றும், உம் காசரில் துறைமுகத்தில், சரக்கை கையாளும் அளவு சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் சூழல் காரணமாக தற்போது பெரிய ரக கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் உள்ள கோர் ஃபக்கான் துறைமுகத்திற்குத் திருப்பி விடப்படுகின்றன.
அங்கிருந்து சரக்குகள், லாரிகள் மூலம் ஷார்ஜாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறிய ரக கப்பல்கள் மூலம் ஈராக்கின் உம் காசர் துறைமுகத்திற்கு வந்தடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பல அடுக்குச் செயல்முறையால் போக்குவரத்துச் செலவு மற்றும் விநியோக நேரம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈராக் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
















