சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாகத் திகழ்ந்த கொடைக்கானல் தற்போது போதைக் காளான்களை விரும்புவோருக்கான சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களில் விளையும் போதை காளான்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வரும் சுற்றுத்தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தளமாக விளங்கும் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியின் மேல்மலை கிராமங்களில் உள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் விளையும் மேஜிக் மஸ்ரூம் என அழைக்கப்படும் போதைக் காளான்கள் எதிர்கால இளைய சமுதாயத்தைச் சீரழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலில் மட்டுமே கிடைக்கும் இவ்வகை போதை காளான்களை வாங்குவதற்காகவே கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் அதிகளவில் வருவதும் தெரியவந்துள்ளது.
உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைக் காளான்களை விரும்பி உண்ணுவதை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி, கிளாவரை ஆகிய கிராமங்களில் விளையும் போதை காளான்களோடு, கொடியவகை போதைப் பொருட்களும் தாராளமாகப் புழங்கி வரும் நிலையில் அது தொடர்பாகப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
அதே நேரத்தில் போதை காளான்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி, மூளையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கி வந்த கொடைக்கானல் தற்போது போதைப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாறி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் தளத்தின் நற்பெயரோடு இளைஞர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் போதை காளான்கள் உற்பத்தியை அடியோடு ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
















